Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » திருமணப் பதிவு


திருமணப் பதிவு கட்டாயம்-90 நாளி்ல் பதிவு செய்ய வேண்டும்:
 

தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009ன்படி பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின், 24.11.2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.
இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகு திருமணப் பதிவிற்கான குறிப்பாணை படிவம் ‘ஒ’ மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்பபடிவம் ஆகியவை இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.
கட்டாய திருமணப்பதிவிற்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன.
இதிலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணப்பதிவிற்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100/ கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின், ரூ.150/ ) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட அல்லது அஞ்சல் வழி அனுப்பப்பட வேண்டும்.
மேலும், திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறியும் அடையாள சான்று நகல்கள் இணைக்கவேண்டும்.
இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார்.
உரிய படிவத்தில் இல்லாத/ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத/உரிய கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள் குறைகளை சரி செய்து மீண்டும் அளிக்குமாறு மனுதாரருக்கு திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு திருமணப்பதிவு விதிகளின்படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் சரித்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்படின், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப்பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.
இந்த மறுப்பு ஆணைமீது சம்பந்தப்பட்ட நபர்கள் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்டப் பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணை திருப்தி இல்லையெனில் இதன் மீது ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத்துறைத் தலைவரின் ஆணையே இறுதியானது.
தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் அனைத்து திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.
 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply