Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

பத்து ஆண்டுகளுக்குப்பின் பஸ் கட்டண உயர்வு :54 சதவீதம் வரை உயர்கிறது

தமிழக அரசு, பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால், வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களின் கட்டணம், சராசரியாக 54 சதவீதம் வரை உயர்கிறது. கடந்த 2001ம் ஆண்டின் இறுதியில்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப்பின், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நகரம் கி.மீ., டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்

திருச்சி 322 180 (105) 200 (130) 245 (180)
மதுரை 450 255 (145) 275 (180) 320 (240)
தஞ்சை 365 210 (118) 225 (140) 270 (190)
நெல்லை 613 350 (200) 375 (240) 435 (320)
கோவை 510 290 (165) 310 (200) 360 (270)
சேலம் 341 195 (115) 210 (135) 245 (180)
புதுச்சேரி 136 195 (115) 210 (135) 240 (180)

எப்போது அமலுக்கு வரும்?

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, "அரசு புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த ஆணை இன்னும் வரவில்லை என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி பட்டியல் தயாரித்து வருகிறோம். அரசு உத்தரவு கிடைத்ததும், கட்டண உயர்வு அமலுக்கு வரும். இதற்கு இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம்' என்றார்.

மற்ற தென் மாநிலங்களுக்கு இணையாக, தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், பஸ் கட்டண உயர்வு தொடர்பான விவாதங்கள் அரசியல் ரீதியாக ஏற்படும் போதெல்லாம், மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்து, ஆளுங்கட்சி பதிலடி தருவது வழக்கம். ஆனால், தற்போதைய கட்டண உயர்வு, தென் மாநிலங்களுக்கு இணையாக உள்ளது.

எவ்வளவு?
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, கடைசியாக கர்நாடகாவில், கடந்த ஜூன் மாதமும், ஆந்திராவில் ஜூலை மாதமும், கேரளாவில் ஆகஸ்ட் மாதமும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, புறநகரில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கு, ஒரு கி.மீட்டருக்கு; கர்நாடகாவில் 43 பைசாவும், ஆந்திராவில் 50 பைசாவும், கேரளாவில் 55 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை, 28 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது; இது, 42 பைசாவாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சொகுசு (டீலக்ஸ்), அதி சொகுசு (சூப்பர் டீலக்ஸ்), அதிநவீன சொகுசு (அல்ட்ரா டீலக்ஸ்) பஸ்களுக்கான கட்டண உயர்வும், பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இயங்கும் குளிர்சாதன பஸ்களுக்கு தற்போது, கி.மீட்டருக்கு, 85 பைசா வசூலிக்கப்படுகிறது. "ஏசி' பஸ்களுக்கு கேரளாவில், கி.மீட்டருக்கு, 90 பைசாவும், கர்நாடகாவில், 1.34 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த நேற்றைய அறிவிப்பில், "ஏசி' பஸ்களின் கட்டண உயர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தென் மாநிலங்களில் வசூலிக்கப்படும் பஸ் கட்டண விவரம் (கி.மீ.,):

*தமிழகத்தில் பழைய கட்டணம், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் புறநகர் (சாதாரண பஸ்கள்) டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்
ஆந்திரா 50 62 70 82
கர்நாடகா 43 65 80 102
கேரளா 55 60 65 75
தமிழ்நாடு 42 (28) 56(32) 60(38) 70(52)

* தமிழகத்தில், கடந்த 2001, டிசம்பர் மாதத்திற்கு பிறகு, அதிகாரப்பூர்வமாக பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக, நேற்று (17ம் தேதி) அறிவிப்பு வெளியாகியுள்ளது.