Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » வளமான எதிர்காலத்தை நோக்கி...!

10, பனிரெண்டாம் வகுப்பை முடித்தவர்களுக்கும், அதை முடிக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் மேற்கொண்டு என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும். அப்போது என்ன முடிவெடுப்பது என்று எடுத்துக் கூறுகிறார், திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் ப. சுரேஷ்குமார்.

புதிய கல்வியாண்டு தொடங்க இருக்கிறது.

10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் தங்களின் அடுத்த கட்ட படிப்பு, வாழ்க்கை குறித்து பலவாறாக சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள்.

பத்தாம் வகுப்பு வரை, எந்தப் பள்ளியில் படிப்பது? ஆங்கில வழிக் கல்வியா? தமிழ் வழிக் கல்வியா? தமிழ்நாடு கல்வி வாரிய பாடத் திட்டத்தில் பயில்வதா, மத்தியக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தில் பயில்வதா? போன்ற கேள்விகளே தோன்றி இருக்கும்.

ஒருமுறை முடிவு செய்து பள்ளியில் சேர்ந்தவுடன் பத்தாம் வகுப்பு வரை பெரிதாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
ஆனால் பத்தாம் வகுப்பிற்குப் பின்பு எந்த `குரூப்' எடுத்துப் படிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டி இருக்கும்.

பத்தாம் வகுப்பு வரை படித்த பாடங்கள் பொதுவாக, அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டியவையாகும்.

அதற்குப் பின்னால், 10, +2 படிப்பதா? நேரடியாகத் தொழில் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஐ.டி.ஐ. படிப்பதா? பாலிடெக்னிக்கில் சேர்ந்து டிப்ளமோ பெறுவதா? என்பன போன்ற கேள்விகளுக்கும் விடை காண வேண்டி இருக்கும்.

பத்தாம் வகுப்பிற்குப் பின் டிப்ளமோ படித்து பின்னர் பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாமாண்டில் சேர்ந்து படிப்பை தொடர்வது ஒரு வழி.

நேரடியாக 10, +2-க்குப்பின் பட்டப் படிப்பை மேற்கொள்வது மற்றொரு வழி.

இன்னும் சிலர் 10-ம் வகுப்பில் தேர்வு பெறத் தவறி பின்னர் 10, +2 படித்த பின்பு பாலிடெக்னிக்கில் இரண்டாவது ஆண்டு சேர்ந்து பயிலும் வாய்ப்பையும் பெறுவது உண்டு.

உறுதியாக ஒரு பாடப்பிரிவைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்துவிட்டால் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப் படிப்பைப் பயின்று பின்னர் ஆய்வுப் படிப்பு போன்றவற்றைத் தொடரலாம்.

10-ம் வகுப்பு அல்லது +2-க்குப்பின் என்ன படிப்பது என்று தீர்மானிக்கும்போது, நாம் படிப்பது நமது இலக்கை அடைவதற்கான கருவியாக உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பணத்தை எடுத்துக் கொண்டு தேவையான பொருட்களைப் பட்டியலிட்டு பல கடைகள் ஏறி இறங்கி தேவையானவற்றை வாங்கி வருவது பலரது முறை.

சில நேரங்களில் தேவையான பொருட்கள் வாங்கச் சென்றாலும், புதியதாக பல பொருட்களைப் பார்க்கும்போது வாங்க வந்ததை மறந்துவிட்டு வேறு சிலவற்றை வாங்கி வருவதும் உண்டு.

பல பொருட்களைச் சந்தையில் பார்க்கும்போது, பலர் வாங்குவதை காணும்போது நமக்கு அது தேவையா என்று யோசிக்காமல் உடனடியாக சில பொருட்களை வாங்கும் தூண்டுதல் ஏற்படுவது உண்டு.

நாம் எல்லா நேரங்களிலும் சரியாகச் சிந்தித்து முடிவெடுப்பதில்லை.

அதற்குக் காரணம் சமூகத்தின் தாக்கம், விளம்பரம், தவணை முறையில் வாங்கும் வாய்ப்பு என்று பல்வேறு விஷயங்கள் ஆசையைத் தூண்டுவதுதான்.

அமெரிக்க பொருளாதாரச் சரிவுக்கு ஒரு காரணம், தேவைக்கேற்ப வாங்க வேண்டும் என்ற சுயகட்டுப்பாடு மக்களிடம் இல்லாததே.

படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போதும் அந்த முடிவு அகம் சார்ந்தது.

நாம் படிக்கும் படிப்பு நம்மை அடைய வேண்டிய இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தேர்வு செய்ய வேண்டும்.

ஆனால் பலரால் சுயமாகத் தமது தேவைகளை, திறன்களை, விருப்பத்தை சரியாக மதிப்பீடு செய்ய முடிவதில்லை.

நன்றாகப் படித்து மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு நல்ல கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பும் ஏற்படும்.

அரசின் உதவித் தொகையை பெறவும், வங்கி மூலம் கடன் பெற்று கல்வி பயிலவும் வாய்ப்பு ஏற்படும்.

நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குச் சில அறக்கட்டளைகள், சில தனி மனிதர்களும் முன்வந்து பொருளாதார ஆதரவை அளிப்பதைக் காண முடியும்.
ஆனால் சிலர் சரியாக முடிவெடுக்க முடியாமல், `விரலுக்கேற்ற வீக்கம்' என்ற பழமொழியை மறந்துவிட்டு ஒரு படிப்பில் சேர்ந்து அதிகப் பணத்தை செலவிட்டு பின்னர் படிப்பையும் சரிவர முடிக்க முடியாமல் திணறுவதைக் காணலாம்.

இன்னும் சிலர் படிப்பை முடித்தாலும் வேலைவாய்ப்பைப் பெறும் திறன்களை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கும் போது கல்விக்கும் வேலை உலகத்திற்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

கடைக்குப் போனால் ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று எண்ணுவது போல் ஏதோ ஒரு படிப்பைப் படிக்க வேண்டும் என்று கருதி படிப்பை தொடரக்கூடாது.

பட்டப் படிப்புப் பயிலவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அறிவை விருத்தி செய்து கொள்ளப் படிக்கலாம்.

கல்விக்கு கரை கிடையாது.

ஆனால் ஒரு வேலைவாய்ப்பை பெற படிக்க வேண்டும் என்றால் அதற்குரிய படிப்புத் திறன்கள் போன்றவற்றை பெறுவதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

சிலர் இரண்டு, மூன்று பாடங்களில் முதுநிலைப் பட்டப் படிப்பைப் பயின்றிருப்பார்கள்.

ஆனால் எதிலும் முழுமையான அறிவை பெறத் தவறி இருப்பார்கள்.

ஒரே சிந்தனையுடன் இலக்கை மனதில் வைத்துக் கொண்டு பயிலும்போது திறமையையும் வெளிப்படுத்த முடியும்.

வெற்றி வாய்ப்பையும் பெற முடியும்.

கல்வியையும், பயிற்சியையும் எந்த அளவிற்குப் பெற வேண்டும்? கல்வி கற்க பொருளாதார வசதி கை கொடுக்குமா? குடும்ப சூழல் இடம் கொடுக்குமா? என்பன போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

சிலரால் எதிர் நீச்சல் போட்டு வெற்றிபெற முடியும்.

பலர் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும் காண முடிகின்றது.

மூளை அறுவை சிகிச்சை நிபுணருக்கும், மின்சாரப் பழுது நீக்குபவருக்கும் திறனும், அறிவும் ஒரே அளவு இருக்கலாம்.

ஆனால் இருவரின் தளமும் வேறுவேறு.

ஒருவர் மின்தொடர்புகளை ஏற்படுத்துவது, பழுதுபார்ப்பது என்று களப்பணிகளில் திறமையை வளர்த்துக் கொண்டவர்.

மற்றவர் நுட்பமான நரம்பு மண்டலங்களை பற்றி பயிற்சி பெற்று, அதில் சிகிச்சை அளிக்கும் திறமை பெற்றவர்.

அவரவர் காட்டும் ஆர்வம், இயல்பான நாட்டம், அனுபவம் மூலமாகவே ஒவ்வொருவரும் தங்களை முன்நிறுத்திக் கொள்ள முடியும்.

ஒரு படிப்பைத் தேர்வு செய்வதற்கு முன்பு அப்படிப்பை பயின்று கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே படித்து முடித்து பணி வாய்ப்பு பெற்றவர்கள் ஆகியோரின் கருத்துக்கள் மற்றும் அப்படிப்பைப் பற்றிய வல்லுனர்கள் கருத்து, உங்களுக்கு அப்படிப்பின் மேல் உள்ள ஈடுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டே படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.

கல்வி நிறுவனங்களை இனங்காணும் போது அவை உரிய அங்கீகாரம் பெற்றுள்ளனவா? போதுமான கட்டமைப்பு வசதிகள், நல்ல கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்கள், வளாக பணிவாய்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளனவா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

10, +2-க்குப்பின் கல்லூரிக்குச் செல்லாமல் பணியாற்றி வருவாய் ஈட்டிக் கொண்டே உயர்கல்வியை தொலைதூரக் கல்வி மூலம் பயின்ற பலர் ரிசர்வ் வங்கிப் பணிகள், சிவில் சர்வீசில் தேர்ச்சி போன்ற சாதனைகளைப் புரிந்து உயர் பதவிகள் வகிப்பதைக் காண முடிகின்றது.

கல்லூரி வளாகத்தில்தான் கல்வி கற்றுச் சாதனை புரியமுடியும் என்பதை பொய்யாக்கி சுயமாக முயன்று, உரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உயர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

சார்லி பாஸ்வெல் என்பவர் இராணுவ வீரர்.

அவர் விளையாட்டில் பல சாதனைகள் புரிந்தவர்.

இரண்டாவது உலகப்போரின் போது பீரங்கி வண்டி தீப்பற்றி எரியும்போது அதிலிருந்து தன்னுடைய நண்பரை காப்பாற்றிய பெருமைக்குரியவர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் கண்பார்வையை இழந்தார்.
ஏற்கனவே விளையாட்டில் ஆர்வம் உடையவராக இருந்ததால் விடாமுயற்சியுடன் `கோல்ப்' விளையாட பழகிக் கொண்டார்.

தனது விடாமுயற்சியாலும் விளையாட்டின் மேல் உள்ள ஆழமான ஈடுபாட்டினாலும் 13 முறை தேசிய கண் பார்வையற்றோருக்கான `கோல்ப்' போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். பென்ஹோகன் என்ற `கோல்ப்' வீரரின் பெயரில் நிறுவப்பட்ட உயரிய விருதை அவர் கையாலேயே பெற்ற பெருமையும் சார்லி பாஸ்வெல்லுக்கு உண்டு.பென் ஹோகனை நேரில் சந்தித்த பாஸ்வெல், அவரோடு
`கோல்ப்' விளையாட விரும்பினார். பென்ஹோகனும் பாஸ்வெல்லின் ஆர்வத்தை அறிந்து அவருடன் `கோல்ப்' விளையாட ஒப்புக் கொண்டார்.

பாஸ்வெல் கண்பார்வை அற்றவர் என்பதால் விளையாட்டை போட்டியாக ஆடாமல், நட்புறவாக விளையாட விரும்புவதாக பென் ஹோகன் கூறினார்.

ஆனால் பாஸ்வெல் போட்டியாகவே விளையாட விரும்பினார்.

உடனே ஹோகன், போட்டிக்கான நாளையும், தேதியையும் தீர்மானிக்கும்படி பாஸ்வெல்லை கேட்டுக் கொண்டார்.
உடனே பாஸ்வெல், `இன்று இரவு 10 மணிக்கு விளையாடலாம்' என்று கூறினார்.

கண்பார்வையற்ற பாஸ்வெல்லுக்கு இரவு, பகல் இரண்டும் ஒன்றுதான்.

ஆனால் பென் ஹோகனால் வெளிச்சம் குறைவான சூழலில் விளையாட முடியாது.

இதை நன்குணர்ந்த பாஸ்வெல், தன்னுடைய பலத்தையும், ஹோகனின் பலவீனத்தையும் சாமர்த்தியமாக கருத்தில் கொண்டு போட்டிக்கு அழைத்தது அவரது சமயோஜித அறிவை காட்டுகின்றது.

எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

அதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்று அறிந்திருப்பதுதான் முக்கியம்.
`யானையின் பலம் தும்பிக்கையிலே என்பதும் மனிதனின் பலம் நம்பிக்கையிலுமே' என்பது நிதர்சனமான உண்மை.

உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் அடையாளம் காணுங்கள்.

உரிய சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்ளுங்கள்.

இடர்களை எதிர்கொள்ள முயலுங்கள்.

அவ்வாறு முடியாவிட்டால் அவற்றை ஒதுக்கிவிட்டு உங்களால் முடியும் என்று நினைக்கும் செயலை செய்யப் பழகுங்கள்.

தன்னால் முடியும் என்பதை அறிந்து அந்த முயற்சியில் ஈடுபடுவதும், இயலாத ஒன்றை இனங்கண்டு தவிர்ப்பதுமே விவேகம்.

உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கும் போதும் எல்லோரும் செய்வதை தானும் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் தன் அறிவில் நின்று சிந்தனை செய்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்.

அழகிய ரோஜா மலர் கவிஞனுக்கு ஒரு பொருளை உணர்த்தும்.

தாவரவியல் வல்லுனருக்கு ஒரு பொருளை உணர்த்தும். மணமேடையிலும், இறைவனுக்கு மாலையாக அணிவிக்கும் போது ஒரு பொருளை உணர்த்தும்.

இறுதி அஞ்சலியில் வேறுவகை உணர்வை வெளிப்படுத்தும்.

ரோஜா இதழ்களை காயவைத்து இடித்து வாசனைத் திரவியங்கள் போன்றவற்றைத் தயார் செய்யும் தொழில் முனைவோருக்கு வேறு பொருளை உணர்த்தும்.

ஆகவே உங்களுக்கு ஏற்ற கல்வித் திட்டத்தைத் தயாரித்து உங்கள் உயர்கல்விப் பயணத்தை தொடருங்கள்.

ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடையவே பிறந்திருக்கின்றோம் என்று நன்கு உணர்ந்து உள்ளொளிப் பயணத்தை தொடருங்கள்.

வெற்றி அனைவருக்கும் சாத்தியமே.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply