Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » ஊழல் ஒழிப்பது எப்போது?

காற்றைப்போல ஊழலும், லஞ்சமும் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. என்றாலும், நமது நாட்டில் லஞ்சம் வாங்குவதும், ஊழலில் ஈடுபடுவதும் "ஒருவிதத் திறமை'யாகவே பார்க்கப்படுகிறது.  அதிலும் குறிப்பாக, இத்தகைய சேட்டைகளைச் செய்துவிட்டு, சட்டத்தின் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தப்பித்துக்கொள்வது சாகசக் கலையாகவே பார்க்கப்படுகிறது. அதில் ஈடுபடுவோர் சாதிக்கத் தெரிந்தோராகப் பார்க்கப்படுகின்றனர்.  சான்றிதழ் வாங்குவதிலிருந்து சகலத்திலும் தொடரும் லஞ்சம், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது என்பதில் தன் உச்சக்கட்ட கைவரிசையைக் காட்டியது.  அதேபோலத்தான் ஊழலும். எந்தத் துறை, எந்தப் பதவி என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும், பதவிகளிலும் அது தன் கைங்கர்யத்தைக் காட்டி தனியாட்சி நடத்துகிறது.  ஒழுக்கமும் மனித நேயமும் பின்தங்கினாலும் பரவாயில்லை. வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்போதும் என்றே மேல்நிலைப் பதவிகளில் உள்ளோர்கூட கீழான செயல்களைச் செய்யத் தலைப்படுகின்றனர். அதன் விளைவுதான் லஞ்சமும், ஊழலும்.  பணம், பதவி, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் அவர்கள் அடிமைப்படுகிறார்கள். நாளடைவில் எந்தக் காரியம் என்றாலும் அதில் எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பதிலேயே அவர்களின் முழுக் கவனமும் பதியத் தொடங்கிவிடுகிறது.  இத்தகைய தவறான செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடுவோர் சிறிதும் வெட்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி புன்னகையுடன் நடப்பதைப் பார்க்க முடிகிறது.  தங்கள் தவறுகள் அனைவருக்கும் தெரிந்தாலும்கூட தங்களை நேர்மையாளர்கள், பரிசுத்தவான்கள்போல வேதம் ஓதி தங்கள் சாத்தான் முகங்களை அவர்கள் எளிதாக மறைத்துக் கொள்கின்றனர்.  "உழைக்காமல் உண்பவன் திருடன்' என்றார் நம் தேசப்பிதா. அதனால்தானோ என்னவோ ஊழல்வாதிகளும், லஞ்சப் பேர்வழிகளும் நேர்மையாளர்களைவிட அதிகமாக உழைக்கின்றனர். ஆனால் அவர்களின் கடின உழைப்பும், கவனமும் இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கும், பிறகு கைது, தண்டனை போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்குமே உதவுகின்றன.  லஞ்சம், ஊழலைக் கண்டிப்பாக ஒழித்தே தீர வேண்டும் என நமது அரசியல்வாதிகள் ஆவேசமாக முழங்குகிறார்கள் என்றால் ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்படும் ஊழல் குழிதோண்டிப் புதைக்கப்படப்போகிறது என்றோ, விரைவில் இன்னொரு மெகா ஊழல் வெளிவரப்போகிறது என்றோதான் அர்த்தமாகிறது. இதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  நமது நாட்டில் நடந்த பெரிய ஊழல்கள் என எடுத்துக்கொண்டால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருசிலவற்றை மட்டுமே நினைவுகூரலாம். ஆனால், அண்மைக்காலத்தில் பெரிய ஊழல்கள் ஆண்டுதோறும் என்பதிலிருந்து மாறி மாதந்தோறும் என வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  ஒன்றையொன்று மிஞ்சும்விதமாக வெளிவரும் ஊழல்கள் தேச நலனில் அக்கறை கொண்டிருப்போரை மிகுந்த கவலைக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்குகின்றன.  வெறும் சட்டம் இயற்றி ஊழலை ஒழித்துவிட முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், லஞ்சம், ஊழல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து அதிகபட்ச தண்டனை தருவதன் மூலம் இக் குற்றங்களைப் பெருமளவு குறைக்க முடியும்.  தனக்கு நன்மை செய்யும் ஊழல் பல கோடி மக்களைப் பாதிக்கிறது என்பதை அதில் ஈடுபடுவோரும் மனசாட்சியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.  எண்ணெய் ஊழல், பீரங்கி ஊழல், சுரங்க ஊழல், அலைக்கற்றை ஊழல் எனத் தொடரும் மெகா ஊழல்களின் பட்டியல் நம்மைப் பதைபதைக்கச் செய்கின்றன.  "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என நமது தாய்த்திருநாட்டின் இயற்கை வளங்களின் பெருமைகள் குறித்து எளிய வரிகளில் எடுத்துரைத்தார் கவிஞர் ஒருவர்.  இன்றோ இயற்கை வளங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் நாட்டின் வளத்தை தங்களால் முடிந்த அளவுக்கு ஊழலின் பெயரால் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.  யுகம்தோறும் அரக்கர்கள் பலரை அழிக்க கடவுள் பத்து அவதாரம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஊழல் என்ற ஒரேயொரு அரக்கனை அழித்து நீதியை நிலைநாட்ட மட்டுமே கடவுள் பத்து அவதாரம் எடுக்க வேண்டுமோ என்றே தோன்றுகிறது. 
please comment!!!

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply