Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » விரைவில் ரயில் பயணிகள் கட்டணம் உயருகிறது : பற்றாக்குறையில் தத்தளிப்பதால் நடவடிக்கை

புதுடில்லி: சரக்கு ரயில் கட்டணத்தைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலின் உயர் வகுப்பு கட்டணமும் விரைவில் உயர்த்தப்பட உள்ளது.

ரயில்வே துறையில், நிதி ஆதாரத்தை சரிகட்டுவது தொடர்பாக, கடந்த வாரம், டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சரக்கு ரயில் கட்டணத்தை, 6 சதவீதம் உயர்த்த, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை, சுற்றறிக்கையாக வெளியிட்டு அமல்படுத்தியது ரயில்வே நிர்வாகம்.ரயில்வே மூலம் அனுப்பப்படும் சரக்குக் கட்டணங்கள், 6 சதவீதம் உயர்த்தப்பட்டு, கடந்த 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலின் உயர் வகுப்பு கட்டணத்தையும் உயர்த்துவது குறித்து, ரயில்வே நிர்வாகம் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ரயில்வே நிதி கமிஷனர் பொம்பா பாபர் கூறியதாவது:கடந்த, எட்டு ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பயணிகளின் கட்டண விஷயத்தில், அதிகப்படியான மானிய சலுகை அளிக்கப்பட்டதால், ஏகப்பட்ட நிதி ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.கட்டுமானப் பணிகள், மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றிற்கு, ரயில்வே துறைக்கு, 57 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது, ரயில்வேயிடம் நிதி கையிருப்பு மிகக்குறைவாக உள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க, நிதியமைச்சகத்திடம், 2,100 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளோம். இது தொடர்பாக, நிதித்துறை செயலரிடம் பேசியுள்ளோம்.இதற்கு நிதியமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக ரயில்வே அமைச்சர் திணேஷ் திரிவேதியும், பிரணாப் முகர்ஜியும் விரைவில் சந்தித்து பேச உள்ளனர். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சாதகமான பலன் ஏற்படும் என நம்புகிறோம்.

காலியாக உள்ள ரயில்வே நிலங்களை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் மூலதன நிதியை பெருக்க முயற்சிக்கிறோம். வளர்ச்சி நிதி மூலம் பயணிகளுக்கான வசதிகள், போக்குவரத்து வசதிகள், ஊழியர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.அரசிடம் கேட்டுள்ள கடன் போதுமானதாக இல்லையென்றாலும். அதிகளவில் வெளியில் கடன் பெற்று கடன்வலையில் சிக்கிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.ஏற்கனவே, மேற்கு ரயில்வே மார்க்கத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தடம் அமைக்க ஜப்பானிடம் கடன் பெற்றுள்ளோம். இதே போன்ற பணியை கிழக்கு பகுதி மார்க்கத்தில் மேற்கொள்ள, உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளோம். இந்த கடனையெல்லாம் திரும்ப செலுத்த வேண்டிய கடமை உள்ளது. ஆகவே அதிக கடன் சுமை என்பது ஏற்படாமல் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

நடப்பு நிதியாண்டில் ரயில்வே செயல்பாட்டு திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவேறுமா என்பது தெரியவில்லை. குறிப்பாக அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஆதாரம் அதிகம் தேவை. மேலும் திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்கள் குறைப்பு பற்றியும் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தேவையில்லாத செலவினங்களை குறைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனினும் ஆறு மாத காலத்திற்கு பிறகு நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையுள்ளது.விரைவில் உயரும்: அரசிடம் நாங்கள் நிதி கேட்டால், அதற்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்த, யாருடைய அனுமதியும் தேவையில்லை. எனவே தான், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இதில் ஏழைகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, உயர் வகுப்பு கட்டணத்தை உயர்த்துவது குறித்து யோசித்து வருகிறோம். கட்டணத்தை முறைப்படுத்தும் திட்டமும் எங்கள் பரிசீலனையில் உள்ள விஷயம். உயர்த்தப்பட உள்ள கட்டணமும் அதிகமாக இருக்கக்கூடாது என்பதில், எச்சரிக்கையாக இருக்கிறோம். எனவே தான், அங்கொன்று இங்கொன்றுமாக கட்டண உயர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.ரயில்வே பட்ஜெட் வரை இந்த கட்டண உயர்வுக்காக காத்திருக்க முடியாது. எனவே, உயர் வகுப்பு கட்டணம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்.இவ்வாறு பொம்பா பாபர் கூறினார்.

கடந்த, எட்டு ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்வு பற்றி பேச்சே எழுப்பக் கூடாது என்ற நிலையில் மத்திய அரசு இருந்தது. குறிப்பாக, மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சராக இருந்த போது, அது குறித்து அதிக அக்கறை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply