Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » கூடன்குளம் அணு மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி

திருநெல்வேலி : கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து விரைவில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று எம்.பி ராமசுப்பு தெரிவித்தார். இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள அதிமுக அரசுக்கு காங்., கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கூடன்குளம் அணு மின் நிலையத்தில் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பதத்தி நிலையம் விரைவில் துவங்கப்படுகிறது. கூடன்குளத்தில் பாதுகாப்பான மின் உற்பத்தி நிலையங்கள் அமைவது தொடர்பாக தலைவர் ஜெயின், திட்ட இயக்குனர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு வசதிகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இங்கு மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது 60 சதவீதம் மின்சார சப்ளை ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரமும் மின்சப்ளை இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விரைவில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூடன்குளத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். நெல்லை மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாகும். நான்குநேரி தொழில் நுட்ப பூங்கா, கங்கைகொண்டானில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தி அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பேச்சிப்பாறை அணையில் இருந்து வீணாகும் உபரி நீரை ராதாபுரம் கால்வாய்க்கு திருப்பி விட வேண்டும். தற்போது இக்கால்வாயில் 9 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இதுசம்பந்தமாக குமரி மாவட்ட கலெக்டரிடம், நெல்லை மாவட்ட கலெக்டர் வலியுறுத்த வேண்டும். மாவட்டத்தில் பரவலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உவரி பகுதியில் கடல் அரிப்பினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் 48 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கவும், 1.75 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கவும் அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்காலிக தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதி மக்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து 100 கோடி ரூபாய் செலவில் நேரடியாக குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்திற்கு கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 1 கோடி செலவில் ஆய்வு பணிகளும் முடிவடைந்துள்ளன. இத்திட்டத்தை தற்போதைய தமிழக அரசு உடனடியாக நிறைவேறற்ற வேண்டும். குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பால பணிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும். நெல்லை - திருச்செந்தூர் ரயிலை தினமும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும். மதுரை - கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தை மின்சார மயமாக்க வேண்டும். இரட்டை வழி பாதை அமைத்தால் மேலும் கூடுதல் ரயில்களை இயக்க வசதி ஏற்படும். பாளை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ரயில்வே ரிசர்வேஷன் அலுவலக நேரத்தை நீட்டிக்கவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும். வாகைகுளம் விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொகுதிக்கு உட்பட்ட பஞ்., பகுதிகளில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் தொடர்பாக மனுக்களை அளிக்கலாம். நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தப்படும். நெல்லை மாவட்ட கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்கள் அளிக்கப்படும். இவ்வாறு எம்.பி கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் அமீர்கான், சுத்தமல்லி முருகேசன், ஜெயம், சங்கரபாண்டியன், ரமேஷ் உட்பட பலரும் உடனிருந்தனர்.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply