Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி உடனடி அமல் : தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சமச்சீர் கல்வியை, 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 1 முதல் 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்துவதாக, சட்ட சபையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். சமச்சீர் கல்வி வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்' நேற்று தீர்ப்பு வெளியிட்டது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் என, தீர்ப்பளித்த ”ப்ரீம் @கார்ட் "பெஞ்ச்' , இதற்கு, 25 காரணங்களையும், பட்டியலிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், புதிய அரசு பதவியேற்ற பின், மே 22ம் தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய தினம், அதாவது மே 21ல், பழைய கல்வி முறையில் பாடப் புத்தகங்களை வெளியிட டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது, சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்வதற்கு முன் கூட்டியே அரசியல் முடிவு எடுக்கப்பட்டது என்பதை காட்டுகிறது.சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்பதற்கு அடிப்படையாக, அரசு முன் எந்த ஆவணமும் இல்லை. சமச்சீர் பாடத் திட்டம், பாடப் புத்தகங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யவில்லை.ஆட்சியில் இருந்த அரசியல்கட்சித் தலைவரின் (கருணாநிதி) சொந்த கொள்கையை விளம்பரப்படுத்தும் வகையில், தனிப்பட்ட புகழ் பாடும் வகையில் பாடப் புத்தகங்களில் சில பகுதி இருந்தது என்பதில் சந்தேகமில்லை.அத்தகைய பகுதிகளை நீக்கியிருக்கலாம். அதற்குப் பதில், காலவரையற்ற முறையில் சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். பொருளாதார, சமூக, கலாசார பாகுபாடு பார்க்காமல், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டு வர, கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், மற்ற வகுப்புகளுக்கு, 2011-12ம் ஆண்டிலும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது என சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்பதால், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை தவிர்க்க, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்ற தமிழக அரசின் வாதம் ஏற்கக் கூடியதாக இல்லை. ஐகோர்ட் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும்தீர்ப்பளித்துள்ளது. சட்டத் திருத்தம் மூலம் இந்த தீர்ப்புகளை ரத்து செய்யும் விதத்தில், சட்டசபையை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வகையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. எனவே, இந்த வகுப்புகளைப் பொறுத்தவரை, சமச்சீர் கல்வி சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் வகை செய்யப்பட்டபடி, அட்டவணையை மாற்றி உத்தரவுகளை பின்பற்றியிருக்கலாம். சட்டத்தில் கூறியுள்ள பிரிவுகளை அமல்படுத்த, நிர்வாக உத்தரவுகளை அரசு பிறப்பிக்க, சமச்சீர் கல்வி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள் தரக் குறைவாக இருக்கிறது என, பலர் முறையீடுகள் செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மே 16ம் தேதி புதிய அரசு பதவியேற்றது. அதன்பின், சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என தனியார் பள்ளிகள், அமைப்புகள் தரப்பில் அளிக்கப்பட்ட முறையீடுகளை, 17, 18ம் தேதிகளில் அரசு பெற்றுள்ளது. இவ்வாறு முறையீடுகள் செய்த பெரும்பாலான அமைப்புகள், சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து, அதில் தோல்வியடைந்தவர்கள். இந்த முறையீடுகள் எல்லாம் விசாரணைக்கு உகந்ததல்ல. அரசே இந்த முறையீடுகளை அனுமதித்திருக்கக் கூடாது. இவ்வாறு, "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு : ""சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு பேசும்போது நடந்த விவாதம்:
டில்லிபாபு: குன்னூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு, நேரடியாக தேர்வு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். 1 கோடியே, 25 லட்சம் பள்ளி மாணவர்கள், பாடப் புத்தகங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா: சமச்சீர் கல்வி தொடர்பாக, இன்று காலை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவை, 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தும்.

டில்லிபாபு: சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஒரு முடிவு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

சமச்சீர் கல்வி இதுவரை...: சமச்சீர் கல்வி என்பது தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநில அரசு கல்வி, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி முறைகளை ஒன்றாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.
2010: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் அறிக்கை மற்றும் கல்வியாளர்கள் குழுவின் ஆய்வு அறிக்கையை அடுத்து சமச்சீர் கல்வி சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்.
2010 -11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்டது. இக்கல்வியை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
2011 மே 11: தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது.
மே 22: சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க அ.தி.மு.க., அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
ஜூன் 7: சமச்சீர் கல்வி சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம். இதன்படி இந்தாண்டு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு. பல்வேறு திருத்தங்களுடன் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., தகவல்.
ஜூன் 8: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு.
ஜூன் 10: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை. மேலும் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புடன் சேர்த்து ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு.
ஜூன் 13: சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு.
தங்களது மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.
ஜூன் 15: ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு இந்தாண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து 2 வாரங்களில் அதை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ஐகோர்ட் அதை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
ஜூன் 17: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்கு தலைமை செயலர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
ஜூலை 5: தமிழக அரசின் நிபுணர் குழு தனது அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
ஜூலை 18: அறிக்கையை விசாரித்த ஐகோர்ட் இந்தாண்டே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு.
ஜூலை 19: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.
ஆக. 4: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.
ஆக. 8: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு.
ஆக. 9: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தாண்டே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து சமச்சீர் கல்வி இந்தாண்டே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., அறிவிப்பு.
please comment!!!

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply