Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: அடுத்த வாரம் கமிட்டி அறிக்கை 

மேல் முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதற்கான அறிக்கையை அடுத்த வாரம் நீதிபதி ரவிராஜ பாண்டியன் அரசிடம் வழங்குகிறார்.  தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்தது.
 
இந்த கமிட்டி 10,400 தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்தது. நீதிபதி கோவிந்த ராஜன் நிர்ணயித்த கட்டணம் போதாது. அதைக்கொண்டு பள்ளியை நடத்த இயலாது. அதனால் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்தன. அதன் அடிப்படையில் 6,400 பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மேல் முறையீடும் செய்தன.
 
இதைத் தொடர்ந்து கட்டிடம், ஆய்வகம் வசதி, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அந்த பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க ஐகோர்ட்டு காலக்கெடு விதித்தது. இதற்கிடையில் நீதிபதி கோவிந்தராஜன் உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மேல் முறையீடு செய்த பள்ளி முதல்வர், நிர்வாகிகளை மாவட்டம் வாரியாக அழைத்து விசாரணை நடத்தினார்.
 
கூடுதலான ஆவணங்களை பெற்று அவர் ஆய்வு செய்தார்.   கடந்த 6 மாதமாக தனியார் பள்ளிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை 6000 பள்ளிகளிடம் ஆய்வு முடித்துள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 400 பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவேண்டும். வருகிற 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
 
இதையடுத்து புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அடுத்த வாரத்திற்குள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி முடிவு செய்துள்ளது.   மே மாதம் இறுதியில் புதிய கல்வி கட்டணம் நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சட்டசபை தேர்தல் முடிவு மே 13-ந்தேதி வெளியிடப்படுவதால் அதன் பிறகு அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தல் முடிவுக்கு முன்போ அல்லது பின்னரோ புதிய கல்வி கட்டணத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.